மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாகியான வேணுகோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேணுகோபால் மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள வங்கிக்குச் சென்று தனது வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் வேணுகோபாலின் மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.