இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் தொழிலாளியான அகஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(29) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வினி(10), ஆஷிகா(8) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அகஸ்டின் புதிதாக வீடு கட்டுவதால் தனது அண்ணன் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அகஸ்டின், மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் புதிய வீட்டில் சீரமைப்பு பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று “டீ ” எடுத்து வருவதாக மகேஸ்வரி கூறி சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மாடியில் இருக்கும் அறையில் மகேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மகேஸ்வரியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் மகேஸ்வரியின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் மகேஸ்வரியின் தந்தை மனோகரன் என்பவர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.