திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவா(38) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்றபோது டீசல் இல்லாமல் பேருந்து நின்றது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் லலிதாம்பிகை(30), ரேவதி(23), ராஜாமணி(62) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.