Categories
மாநில செய்திகள்

டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி…. அசத்தும் தமிழக அரசு….!!!!

‘டிரோன்’ மூலம் கொசு மருந்தை கால்வாய்களில் தெளிக்கும் பணியை சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை மாநகரத்தில் உள்ள நீர்நிலைகளில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில்,பெருநகர மாநகராட்சி சார்பில் ‘டிரோன்’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலமாக கொசு மருந்தை தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் இந்த பணியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவருடன் மயிலாப்பூர்  எம்.எல்.ஏ. த.வேலு, தென் சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களால் பரவும் பல நோய்களை கட்டுப்படுத்தும் வகையில், தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3463 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 251 கையினால் கொண்டு செல்லும் புகைப்பரப்பும் எந்திரங்கள் மேலும் 9 சிறிய வகை புகைப்பரப்பும்  எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளில் குடிசைப் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தி அதிக அளவில் இருப்பதாக பெறப்பட்ட புகாரின் பெயரில், மீண்டும் டிரோன் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சென்னையிலுள்ள அடையாறு கூவம், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மற்றும்  31 சிறிய கால்வாய்களிலும் டிரோன் முறையின் மூலம் சுமார் 113 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கொசுப்புழு கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள எளிதாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Categories

Tech |