தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்களுடைய டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் இணைப்பதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில், தனது ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு (Onetime Registration) மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு [email protected]/ [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மார்ச் 23-ம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும். ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை.