[அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் காரணமாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவரின் வெற்றிக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.இதனையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் முன்பு ஜோ பைடன் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தெருக்களில் இசைக் கருவிகளை கொண்டு பாடல்கள் பாடியும், நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி ஜோ பைடன் ஆதரவாளர்கள் அனைவரும் வெற்றி முழக்கங்களை எழுப்பியபடியே நகர தெருக்களில் ஊர்வலம் நடந்து சென்றனர்.
இதுபற்றி ஜோ பைடன் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், “இந்த வெற்றியின் மூலமாக அமெரிக்க ஜனநாயகம் மற்றும் அகிம்சை காக சிறுபான்மையினர் மீண்டும் குரல் எழுப்பியுள்ளனர். இனவெறிக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஒரு புதிய அத்தியாயம். ஜோ பைடன் இன்னும் நிறைய வேலைகள் செய்வார். அவரை வெற்றிபெற வைத்ததில் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.