ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான சந்திப்பாகும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையை தன்னகத்தே கொண்ட ஒரு தொகுதி. 2011 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தனி சட்டமன்ற தொகுதியாக உருவானது. இதுவரை இரண்டு தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகும்.
நாட்றாம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் என 3 பேரூராட்சிகளும், 38 கிராம ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இங்கு விவசாயம், பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கிறது. 20,000 ஏக்கரில் கரும்பு, பருத்தி, வாழை சாகுபடியும் நடைபெறுகின்றன. இத்தொகுதியில் பெரும்பாலான மக்கள் ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி உள்ளனர். இந்த பகுதியில் பயிரிடப்படும் பருத்தி தரமாக உள்ளதால் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல நூல் ஆலைகளுக்கு தேவையான பருத்தியை இங்கிருந்து தான் கொள்முதல் செய்கின்றனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் ஒரு கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா தளமாக உள்ள ஏலகிரி மலையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் பேருந்துகள் நாட்றாம்பள்ளி ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் சாலையில் செல்வதால் நாட்றாம்பள்ளியை சேர்ந்தவர்கள் வாணியம்பாடி பகுதியில் இறங்கி அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து ஊருக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பேருந்துகள் நாற்றாம்பள்ளி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக நீடிக்கிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்றும், ஜோலார்பேட்டை-வாணியம்பாடி நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இப்பகுதியில் பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம், அக்ரவரம் பகுதியில் புதிதாக அரசு தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.