கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் சென்ற சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 900 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கின்ற கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் பெர்லினில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு சில மக்களைத் தவிர வேறு எவரும் முகக்கவசம் அணியவில்லை. ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என கூச்சலிட்டனர். அந்த ஊர்வலத்தில் பலதரப்பட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஜெர்மனியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர். முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கின்றது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் ஆதங்கத்தை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்துகொண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜெர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.