Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜெய்பீம் பட பாணியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த – 5 பேர் கைது செய்யப்பட்டார்களா?

கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் பட பாணியில் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 நபர்களை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தியாகதுருகம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 14ஆம் நாள் சின்னசேலத்தில் வசித்து வரும் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் என 3 பேரை கள்ளக்குறிச்சி, சின்னசேலம் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் இரவு 11 மணிக்கு திடீரென வந்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் 16ஆம் நாள் கொங்கராய பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பபரமசிவம், க்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் மனைவி மற்றும் உறவினர்கள் நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தங்களது கணவர்களையும், உறவினர்களையும் போலீசார் அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி வருவதாக சந்தேகம் இருப்பதாகவும், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய முயற்சிப்பதாகவும் புகார் மனு அளித்தனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் மற்றும் தீண்டாமை முன்னணி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இதற்காக சில அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் கள்ளக்குறிச்சி போலீசார் நவம்பர் 17ஆம் தேதி பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகிய 3 பேரின் கை ரேகைளிலும் சின்னசேலம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் ஆகிய 3 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப் போவதாக கூறியும், விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல் தெரிவித்தனர். இந்த நிகழ்வு அவர்களது குடும்பத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 26 சவரன் நகைகள், 25 ஆயிரம் பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி குற்றவியல் முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்பாண்டியன் மூவருக்கும் 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம், செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் விடுவித்துள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக நடைபெற்ற பரபரப்பு சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்தனர்.

Categories

Tech |