ஜெய்பீம் படத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தினை அவமதிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பியதால் குறிப்பிட்ட அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சிலர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ஜெய் பீம் அமைந்திருப்பதாக கூறி வன்னியர் சேவா சங்கம் சார்பில் வேளச்சேரி காவல்நிலையத்தில் சூர்யா மற்றும் ஞானவேல் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சூர்யா மற்றும் ஞானவேல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சர்ச்சைக் குள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும், குறிப்பிட்ட சமூகத்தவரை அவமதிக்கும் விதமான காட்சிகள் இருக்கிறது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லாத காரணத்தினாலும் சூர்யா மற்றும் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.