முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த அடிப்படையில் விசாரணை ஆணையம் முன் சசிகலா உறவினா் இளவரசி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகினர். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரான ஓபிஎஸ் உணவு இடைவேளைக்காக வெளியே வந்தார். சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பின் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு முதன்முறையாக ஓபிஎஸ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.