Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 7வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவக் குழுவை அமைத்து அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி, 5வது முறையாக 4 மாத காலத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 6வது முறையாக கடந்த வருடம் அக்.24 முதல் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 7வது முறையாக மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |