Categories
அரசியல்

ஜூலை 18 ‘தமிழ்நாடு தினம்’… “இது தான் கரெக்டா இருக்கும்”…. வைகோ அறிக்கை…!!!

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப் படுவது பொருத்தமாக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

“மொழிவாரியாக மாநிலங்கள் அமைப்பதற்கு முன்பாக சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தை நேரு முன் வைத்தார். இதனை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது முதல்வராக இருந்த காமராஜர் பெரியாரின் கருத்தை ஆதரித்து, நேருவிடம் இதை செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார். தென்தமிழகத்தின் தமிழர்கள் கேரள மாநிலத்துடன் சேர்ந்து விடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தினர். அதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

வடக்கே திருத்தணி தமிழகத்தோடு இணைவதற்கும், சென்னையை காப்பதற்கும் வட எல்லை போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார் மாபொசி. அண்ணா தெற்கு எல்லை போராட்டத்திற்கும் வடக்கு எல்லை போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். இந்த எல்லை போராட்டங்களில் திமுக தொண்டர்கள் பலரும் சிறை சென்றனர். இது ஒரு மறக்க முடியாத வரலாறு. எனவே நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளை நாம் கொண்டாட வேண்டும் தான். அந்த நாளில் எல்லை போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்த வேண்டும்.

சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றி முதலமைச்சர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த ஜூலை 18-ஆம் நாளை தமிழ்நாடு தினம் என்று கொண்டாடுவதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. பொருத்தமானது.” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |