ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் ஆன்லைன் மோசடி தொடர்பான எச்சரிக்கை. சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் மூலமாக பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் வங்கி தரப்பில் இருந்தும் நிறுவனங்கள் தரப்பில் இருந்தும் பல விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் உள்ளனர்.
வங்கியிலிருந்தோ நெட்வொர்க் நிறுவனத்திலிருந்தோ அழைப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்களை தெரிந்துகொண்டு மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜியோ நெட்வொர்க் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் போன் கால் மூலமாக அல்லது லிங்க் மூலமாக கேஒய்சி விவரங்களை அல்லது ஆதார் விவரங்களை கேட்டால் அதனை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ஜியோ நெட்வொர்க் தரப்பிலிருந்து எந்த ஒரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்து அதில் விவரங்களை சரிபார்க்க வலியுறுத்துவது கிடையாது என்றும், சமீப காலமாக இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களுக்காக தற்போது மை ஜியோ என்ற ஆப் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.