மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின் படி நேற்றைய கோவிட் -19 நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22,645 ஆக பதிவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமைக்ரான் எனப்படும் மாறுபட்ட கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 6,041 ஓமைக்ரான் பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 3 முதல் அங்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து வகையான வெளிப்புற நடவடிக்கைகளும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தடைசெய்யப்படும். இருப்பினும், அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்வுகளை அதிகபட்சமாக 200 நபர்கள் என்ற அளவில் நடத்தலாம். மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களை கொண்டு தொடர்ந்து செயல்படும்.உணவகங்கள், பார்கள், திரையரங்குகள் ஒரே நேரத்தில் 50 சதவீத நபர்கள் என்ற விகிதத்தில் செயல்படலாம். வழக்கமான செயல்பாட்டு நேரத்தின்படி 50 சதவீத இருக்கை வசதியுடன் மெட்ரோ சேவைகள் கிடைக்கும். உள்ளூர் ரயில்களும் இதேபோன்ற நெறிமுறையைப் பின்பற்றப்பட்டு இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.