இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர்கள் பலரும் மைதானத்தின் பிட்ச் பற்றி பல விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. டெஸ்ட் போட்டிக்கு இப்படியா பிட்சை தயார் செய்வது என பல வீரர்கள் புகார்களையும், விமர்சனங்களையும் தெரிவிக்கின்றனர்
இதனை தொடர்ந்து மீண்டும் இரு அணிகளுக்கும் இடையேயான 4 வது மற்றும் 5 வது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் நடைபெற உள்ளதால் அப்போதும் பிட்சின் தரம் இப்படித்தான் இருக்குமா என பலரும் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவின் வெற்றி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தரும் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில்” இப்படிப்பட்ட பிட்சில் போட்டி நடைபெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். பந்து காரணமில்லாமல் சுழன்று சென்றது. இதனால் இந்த போட்டியும் 2 நாட்களில் முடிவடைந்தது .இது டெஸ்ட் போட்டிக்கு ஆரோக்கியம் இல்லை. இங்கிலாந்து அணியை எளிதாக இந்தியாவால் வெற்றி கொள்ள இயலும். பிட்ச் சாதகமாக இல்லை என்றாலும் இந்தியாவால் இங்கிலாந்தை எதிர்கொள்ள இயலும். இதனை இந்திய அணி புரிந்து கொண்டு அடுத்த டெஸ்ட் போட்டியில் தரமான பிட்சை தயார் செய்யும் எனவும் போட்டியில் வெற்றி பெறும் எனவும் நான் நம்புகிறேன்” என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.