Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சோகம்…. ரயில் படிக்கட்டில் பயணம் செய்த இருவர் பரிதாப மரணம்…!!!

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து விழுப்புரம் திருச்சி வழியாக காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கும்போது விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகில் மாலை 6 மணி அளவில் வரும் போது ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து இரண்டு பேர் பயணம் செய்தார்கள்.

அவர்கள் திடீரென்று ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதுகுறித்து ரயில்வே கேட் கீப்பர் விழுப்புரம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வந்த சோமசுந்தரம் என்பவருடைய மகன் அருண் (22) என்பதும், மற்றொருவருக்கு 30 வயது இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்துள்ளார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |