இரவு நேர உணவிற்கு உத்தரவாதம் அற்ற நிலையில் 81 கோடி பேர் வாழ்ந்து வருவதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
உலகில் இதுவரை கணக்கிடப்பட்டு உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 81 கோடி பேர் இரவு நேர உணவின்றி உறங்கச் செல்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 16 கோடி அதிகமாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மனிதவள ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று , பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை காரணிகள் ,உள்ளிட்ட பல காரணங்களால் மனிதவாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதுவரை உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 81.1 கோடியாக உயர்ந்துள்ளது. உணவு தேவை, இருப்பு, வினியோகம் மற்றும் பற்றாகுறை ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆப்கானிஸ்தான் உணவு பாதுகாப்பு மோசமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், அந்நாட்டில்உள்ள மொத்த மக்கள் தொகை 4 கோடி பேரில் தற்போது 3.7 கோடி பேர் உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும் , இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 5 ல் 3 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதுபோல, சிரியா நாட்டிலும் 2 கோடி பேரில்1.24 கோடி பேர் அடுத்த வேளை உணவு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் , காங்கோ குடியரசு, தெற்கு சூடான், சோமாலியா, உள்ளிட்ட நாட்டு மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.