பீகார் சட்டசபை தேர்தல் உள்பட காங்கிரஸ் அணி தலைமையை கபில் சிபில் கடுமையாக குற்றம் சாட்டி பேட்டியளித்துள்ளார்.
புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் பெரும் கூட்டணி அமைத்த காங்கிரஸ் அணி மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட்டதில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதியில் வெற்றி பெற்றது தான் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அணியின் தலைமையில் ஒரு பெரிய மாற்றம் வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்களை தனியார் செய்தி நிறுவனத்திற்கு கபில் சிபில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியதாவது, “பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று கட்சியாக மக்களால் பார்க்கப்படவில்லை.
மேலும் இதனால் கட்சியின் பிரச்சினை தொடர்பாகவும் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எங்களில் சிலர் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தோம். ஆனால் அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்பதற்கு பதிலாக எங்களுக்கு எதிராக திரும்புகிறார்கள். அதற்கான முடிவுகளை எல்லோரும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய கருத்தை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்த வழி ஏற்படுத்தி கொடுக்காத போது நான் பொதுஇடத்தில் தெரிவிக்க தள்ளப்பட்டுள்ளேன். கடந்த ஆறு வருடங்களில் சுய பரிசோதனை செய்யாத நிலையில் இப்போது சுய பரிசோதனை செய்வதில் எப்படி நம்பிக்கை இருக்கும்?
மேலும் காங்கிரசில் அமைப்பு ரீதியாக என்ன பிரச்சனை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான பதில்கள் எங்களுக்கும் தெரியும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். அவர்கள் அந்த பதிலை ஏற்க மறுத்து வருகின்றனர். கட்சி பிரச்சினைகளையும் அதற்கான பதில்களையும் ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் எப்பொழுதும் தைரியமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.