Categories
அரசியல் மாநில செய்திகள்

சொல்லுறதுக்கு 2 நாட்கள் ஆகும்…! தரையில் ஊர்ந்து செல்லனுமா ? ஈபிஎஸ் மீது ஸ்டாலின் காட்டம் …!!

பஞ்சாப் விவசாயிகள் முதல்வர் போல தரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமா ? என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  இன்று ஒரு ஆட்சி இருக்கிறது. எடப்பாடி தலைமையில் இருக்கும் அந்த அதிமுக ஆட்சியில் எந்தத் தரப்பு மக்களாவது நன்மை அடைந்துள்ளார்களா என்று கேட்டால் இல்லை. அனைத்து தரப்பு மக்களையும் துன்பத்தில் துடிக்க விட்ட ஆட்சிதான் இந்த அதிமுக ஆட்சி. ஏழைகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? ஒடுக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் செய்தது என்ன? இந்த கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்ல முடியாது.

இவர்கள் மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களை பட்டியலிட வேண்டும் என்றால் இரண்டு நாட்கள் ஆகும். மத்திய பாஜக அரசுக்கு பாதம் தாங்கி தமிழ்நாட்டில் எந்தெந்த உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தார்கள் என்ற பட்டியலையும் தயார் செய்யலாம். நீட் தேர்வு ஒன்றே போதும் எடப்பாடி ஆட்சியின் நிலையைக் கூற. ஒரு முறையல்ல இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக விளக்கம் கேட்டு தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதற்கு ஒப்புதல் வாங்கி தர எடப்பாடி அவர்களால் முடிந்ததா?

பழனிச்சாமி முதலமைச்சராக வந்தது முதல் நீட் கொடுமை நடக்கிறது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நீட் தேர்வை தமிழ்நாடு மட்டுமே எதிர்ப்பதாக அவர் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் நீட் தேர்வு தேவையா என்று கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். அப்போதாவது அவர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் பழனிசாமி வழக்கு போட்டாரா. தமிழ்நாடு எதிர்க்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழகம் கல்வியில் விழிப்புணர்ச்சி உடைய மாநிலம்.

இன்று பஞ்சாப் மாநிலம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறது. காரணம் அங்குள்ளவர்கள் விவசாய விழிப்புணர்ச்சி பெற்றவர்கள். பழனிச்சாமி தன்னைப் போன்று தரையில் ஊர்ந்து செல்ல சொல்கிறாரா? கல்வியில் மேன்மை அடைந்த மாநிலம் தமிழகம் என்ற காரணத்தினால் எதிர்க்கிறோம். இதுகூட முதல்வருக்கு புரியவில்லை. மருத்துவப் படிப்பு மற்றும் முதுநிலை படிப்பில் மாநிலங்களிலிருந்து அகில இந்திய தொகுப்பு வரை  வழங்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டது. அதை வாங்கித் தருவதில் எடப்பாடி அரசு காட்டிய முனைப்பு என்ன  உச்சநீதிமன்றத்திற்கு நாம் போனதால் அவர்களும் ஒப்புக்கு ஒரு வழக்குப் போட்டார்கள். ஆனால் மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த வருடமே இட ஒதுக்கீடு தேவை என எடப்பாடி அரசு வாதாடவில்லை.

இந்த ஆண்டு தர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய போது அதை எடப்பாடி அரசு எதிர்க்கவில்லை. அமைதியாக இருந்தனர். இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்த அரசுதான் இந்த எடப்பாடி அரசு. சமீபத்தில்  செய்தி ஒன்று வெளியானது  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு ரத்து செய்தது. லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். உதவித்தொகையை நிறுத்துவது என்பது அவர்களை படிக்க வராத உனக்கு எதற்கு படிப்பு என்று கூறுவதற்கு சமம். அதை இந்த எடப்பாடி அரசு கண்டித்ததா என முக .ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |