நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி நாகராஜபுரம் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் முறையாக 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1,392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இந்த குடியிருப்புகளை பெற தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஏராளமான மக்கள் இந்த குடியிருப்புகளை பெற விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர். மேலும் இந்த விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை நகராட்சி பகுதி எனில் திட்டப்பகுதிக்கு ஏற்ப ரூ. 1,49,000, ரூ.1,60,700 முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எருமப்பட்டி நாகராஜபுரம் திட்ட பகுதி என்றால் ரூ.1,64,075 வீதம் முன் பணம் செலுத்த வேண்டும். மேலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும் உரிய ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.