உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சொந்த நெற்பயிருக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி தான் விளைவித்த நெல்லை தீ வைத்து எரித்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: “உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி தனது நெற்பயிரை விற்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களுக்கு ஏறி இறங்கியுள்ளார்.
ஆனால் அதனை விற்க முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் சொந்த நெற்பயிரை தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இந்த அமைப்பு விவசாயிகளை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? மத்திய அரசு கட்டாயம் வேளாண் சட்டங்களை மறு பரிசீலனை செய்து தீர வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு விவசாயி தனது சொந்த நெற்பயிருக்கு தீ வைப்பதை விடப் பெரிய தண்டனை எதுவும் இருக்காது என்று கூறி வருத்தம் தெரிவித்த வருண்காந்தி, நமக்கு உணவு அளிப்பவர்களை நம்மால் பாதுகாக்க முடியாவிட்டால் அது நாட்டில் உள்ள அனைவரின் தோல்வியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.