நாம் அனைவருக்கும் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது கஷ்டமான விஷயம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கார் வாங்கலாம். அதற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. சில தகுதிகளின் அடிப்படையில் குறைந்த வட்டியில் கார் வாங்குவதற்கு சில சலுகைகளுடன் கடன் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு வங்கியிலும் பல்வேறு தகுதிகள் உள்ளன. பொதுவாக கார் வாங்கும் நபர் 18 வயது முதல் 75 வயது வரையில் இருக்க வேண்டும். அதனைப் போலவே அவரது மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். தற்போது அவர் வேலைபார்க்கும் நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருடமாவது வேலை பார்த்து கொண்டிருக்க வேண்டும். சுய தொழில் செய்வோருக்கும் கடன் வழங்கப்படுகிறது. அதற்கான விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
ஆதார் கார்டு, பான் கார்டு, ட்ரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். முகவரி சான்றுக்கு ரேஷன் கார்டு, கரண்ட் பில் அல்லது சிலிண்டர் பில் போன்றவற்றை கொடுக்க வேண்டும். வட்டி விகிதத்தை பொருத்தவரையில் 7% தொடங்கி வங்கிகள் கடன் வழங்குகின்றன.பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 7 சதவீத வட்டியில் கடன் பெறலாம்.
அதற்கு செயல்பாட்டுக் கட்டணம் ரூ.1,500 வசூலிக்கப்படும். அதேபோல, கனரா வங்கியில் 7.30 சதவீத வட்டி உள்ளது. இதற்கான செயல்பாட்டுக் கட்டணம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும். ஆக்சிஸ் வங்கியில் 7.45 சதவீத வட்டியும், ஃபெடரல் வங்கியில் 8.45 சதவீத வட்டியும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.20 சதவீத வட்டியும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு பல்வேறு வங்கிகளில் வட்டி மற்றும் இதர அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் கடன் வாங்கலாம்.