சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சைக்கிளில் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை தனி வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் ஏராளமானோர் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாகவும், வாகனங்களின் வேகத்தால் பயமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதற்காக பாதுகாப்பான வழி அமைப்பதற்கும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆணையிட்டிருந்தார்.
அதன்பேரில், சென்னை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூர பாதையில் தற்காலிகமாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்கு தனி பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். அதன்படி, நேற்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான தனி வழிப்பாதையில் சென்னை காவல்துறையினர் ஆயுதப்படை விளையாட்டு பிரிவைச் சேர்ந்த 40 காவல்துறையினர் மற்றும் 150 பொதுமக்களுடன் சைக்கிள் பயணம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அந்த சோதனையின் போது, முட்டுக்காடு முதல் அக்கறை வரையிலான இதே வழித்தடத்தில் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
மேலும் அடையாறு துணை கமிஷனர் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் இனிதே நடந்து முடிந்தது. இந்த நிலையில், சென்னை போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் படி சைக்கிள் பயணம் மிகவும் பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் நடைபெற்றதாகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இந்த சைக்கிள் பயணத்தில் கலந்துகொண்ட பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை அந்தப் பாதையில் சைக்கிள் பயணத்திற்கான தற்காலிக ஒரு வழி பாதை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.