வங்கிக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் சாம் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிஸ்டிலரி சாலையில் இருக்கும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்னையா சம்பந்தப்பட்ட வங்கியிலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரிடமும் பொன்னையா புகார் அளித்தார்.
ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமலேயே புகார் முடிக்கப்பட்டதாக பொன்னையாவுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொன்னையா குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவருக்கு 58 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 10000 ரூபாய் நஷ்ட ஈடு, வழக்கு செலவு 5000 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.