சேலத்தில் இருக்கும் காடையாம்பட்டியில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்திச் சென்ற மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் காடையாம்பட்டியிலிருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் காடையாம்பட்டி பொட்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்ததையடுத்து லாரியில் இருந்த 1.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் சேலத்திலுள்ள சூரமங்கலம் அருகே இருக்கும் சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இவர் காடையாம்பட்டி சுற்றுவட்டார இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருகின்றார்கள்.