கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவுடைய விளை நிலங்களில் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிர்களும் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியது. மேலும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தண்ணீர் வயல்களிலேயே தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டோம். தற்போது கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டதால் நஷ்டம் அடைந்துள்ளோம். சிதம்பரம் கோட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாக பாசன வாய்க்காலை தூர்வாரி பராமரிக்காமல் இருப்பதால் அதிகளவு தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.