காற்றின் வாயிலாக வேகமாக பரவும் கெனைன் பார்வோ வைரஸ் விலங்குகளை அதிகளவில் தாக்குவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கெனைன் பார்வோ எனப்படும் வைரஸ் தங்களது செல்லப்பிராணிகளை தாக்குமா என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது எனவும், விலங்குகளை மட்டும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். கெனைன் பார்வோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் மிகுந்த சோர்வுடன் இருக்கும் எனவும், தொடர்ச்சியாக வாந்தி, இரத்தம் கலந்த வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கெனைன் பார்வோ தொற்றால் நாய்கள் பாதிக்கப்படுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவது வழக்கம், ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பலரும் தங்களது நாய்களுக்கு தடுப்பூசி போடவில்லை. இதன் விளைவாக இந்த நோய் தொற்று அதிகரித்திருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.