ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை வ.உ.சி நகரில் வசிக்கும் ஸ்டெல்லா ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான பாண்டியன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் தனது தாயை செல்போன் முலம் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டெல்லா தனக்கு 8 லட்ச ரூபாய் வரை கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் தொந்தரவு அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லாவின் தாய் தனது மருமகன் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஸ்டெல்லாவின் தந்தை நடராஜன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கைகளில் பிளேடால் அறுத்து கொண்டும், கொசு மருந்து குடித்ததால் வாயில் நுரை தள்ளியபடியும் ஸ்டெல்லா மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.