சென்னை மாவட்டத்தில் உள்ள புலிகொரடு பகுதியில் லாரி டிரைவரான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருப்புசாமி தனது தாயிடம் மது போதையில் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து தாம்பரம்- திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் வேலை பார்க்கும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் கருப்புசாமி தங்கியுள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியை கருப்புசாமி காதலித்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மது போதையில் கருப்புசாமி பள்ளி மாணவியுடன் செல்போனில் வீடியோ கால் பேசி கொண்டிருந்தபோது மாணவியின் தாய் வந்துள்ளார். இதனால் மாணவி செல்போன் இணைப்பை துண்டித்தார். சிறிது நேரம் கழித்து மாணவி கருப்புசாமியை மீண்டும் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதுகுறித்து மாணவி கருப்புசாமியின் தாய் மற்றும் சகோதரியிடம் தகவல் கூறியுள்ளார்.
உடனடியாக கருப்புசாமியின் தாய் சின்னம்மா தனது மகன் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது புடவையால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பசாமி உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.