மாடியில் இருந்து தவறி விழுந்து சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சிறை காவலர் குடியிருப்பில் பாலு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாலு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி வீட்டு மொட்டை மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்தபடி பாலு செல்போனில் பேசியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த பாலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.