பெண்ணிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது நீங்கள் பணம் செலுத்தி பணி செய்தால் அந்த பணம் கூடுதலாக வரும் என அதில் இருந்துள்ளது. இதனை நம்பிய அந்த பெண் முதலில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி பணி செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணிற்கு கூடுதலாக பணம் கிடைத்துள்ளது. இதனால் 2-வது முறையாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் பணியை முடித்த பிறகு எவ்வித பணமும் வரவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.