தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சிநிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று (04/09/2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. இவற்றில் நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் ஆகிய முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்று விருதுகள் பெற்றனர். இதற்கிடையில் நடிகர் சித்தார்த் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகிய “காவியத்தலைவன்” என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த சித்தார்த் பேசியதாவது “உண்மையான கலைக்கான பாராட்டும், விருதும் சரியான தருணத்தில் வரவேண்டும்.
அது இப்படத்திற்கு கிடைக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பின் எங்களின் உழைப்பிற்கும், அனுபவித்த கலைக்கும் இந்த மாதிரி ஒரு விருது கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. காவியத் தலைவன் படக்குழுவுக்கு நன்றி. ஒரு அரசாங்கத்திடம் சிறந்த நடிகருக்கான விருது வாங்குவது என்பது மிகபெரிய விஷயம் ஆகும். அதுவும் 8 வருடங்களுக்கு பின் வாங்குவது அதிசயம் மட்டுமின்றி அற்புதமும் கூட. இதற்காக நன்றி” என்று பேசினார். அதன்பின் வெளியேறிய சித்தார்த்தை ரசிகர்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்துகொண்டனர். அப்போது லிப்ட்டுக்குள் சென்ற சித்தார்த்திடம் ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்றபோது அவரிடம் இருந்து செல்போனை நடிகர் சித்தார்த் பறித்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.