காலணி கடை உரிமையாளரை வாலிபர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோகன்ராவ் காலனியில் பைசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே காலணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் வசிக்கும் லோகேஷ் என்பவர் கடந்த 7-ஆம் தேதி காலணி வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் லோகேஷ் 1,500 ரூபாய் மதிப்புள்ள காலணியை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை கடைக்கு சென்ற லோகேஷ் இந்த காலனி எனக்கு வேண்டாம் என கூறிவிட்டு தொகையைத் திரும்பக் கேட்டுள்ளார்.
அப்போது மாற்று காலனி தருவதாகவும், பணத்தை திரும்ப தர இயலாது எனவும் பைசு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது பைசுவின் நண்பர்கள் சிலர் லொகேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பைசு தனது கடையை திறப்பதற்காக சென்றபோது லோகேஷ் கையில் அரிவாளுடன் அங்கு காத்துக் கொண்டிருந்தார். மேலும் பைசுவின் முதுகில் லோகேஷ் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் தப்பி ஓடிய பைசுவை ஓட ஓட துரத்தி சென்று உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு லோகேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பைசுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் லோகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் லோகேஷ் பைசுவை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.