விராட் கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் சூப்பர் ஸ்டார் விராட்கோலி, தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022ல் நல்ல ஃபார்மில் உள்ளார். வலது கை பேட்டர் 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை (அக்.,23) மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் அடித்து அசத்தினார். அத்துடன் நின்று விடாத கோலி நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார்.
விராட் கோலி 2022 இன் முதல் பாதியில் ஃபார்முக்கு திரும்ப போராடிக்கொண்டிருந்தார், மேலும் ஐபிஎல் 2022ல் கூட சரியாக ஆடவில்லை. ஆனால் அவர் கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய கோப்பை டி20 போட்டியில் மீண்டும் தனது பழைய கோலியாக திரும்பினார்.. அங்கு அணியின் இறுதி சூப்பர் 4 போட்டியில் அவர் தனது முதல் டி20 சதத்தையும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்தார். செப்டம்பர் 8 ஆம் தேதி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த அந்த ஆட்டத்தில், விராட் 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக தனிநபர் ஸ்கோர் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இருதரப்பு தொடர்களில் விராட் கோலி சிறப்பாகவே செயல்பட்டார், மேலும் அவர் இப்போது டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடியதன் மூலம் ஈர்க்கப்பட்ட பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி அவரைப் பாராட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் (KSCA) நடந்த பாராட்டு விழாவில் பேசிய, புதிதாக நியமிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் பின்னி, பாகிஸ்தானுக்கு எதிராக கம்பீரமாக விளையாடியதற்காக கோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். “இது எனக்கு ஒரு கனவு போல் இருந்தது. இதுபோல ஒரு போட்டியை பார்க்க வேண்டும் என்பது எனக்கு கனவாகவே இருந்தது. அந்தப் பந்தை விராட் கோலி சிக்சர் அடித்தது எனக்கு இன்னமும் கூட வியப்பாகவே இருக்கிறது. கோலி பந்தை அடிக்கும் விதத்தை என்னால் உணர முடியவில்லை. இது ஒரு அருமையான வெற்றி. இதுபோன்ற போட்டிகளை நீங்கள் பார்த்ததில்லை, பெரும்பாலான நேரங்களில் போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது. திடீரென்று அது இந்தியாவுக்குத் திரும்பியது என்றார்.
மேலும் கோலி தன்னை யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு கிளாஸ் பிளேயர் மற்றும் அவரைப் போன்ற வீரர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் செழித்து வளர்கிறார்கள். அழுத்தம் தான் அவர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது,” கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்,
இன்று (அக்டோபர் 30) பெர்த்தில் சூப்பர் 12 கட்டத்தின் மூன்றாவது குரூப் 2 ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.