அண்ணாநகர் துணைகாவல் ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள மசூதிக்கு எதிரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. இதற்கு அருகில் டாஸ்மாக் பாரும் இருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசு விதி ஆகும். அந்த வகையில் இந்த டாஸ்மாக் கடையும் இயங்குகிறது. ஆனால் அதனருகிலுள்ள பாரில் 24 மணிநேரமும் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. அதாவது நள்இரவு மற்றும் அதிகாலை 5 மணிக்குச் சென்றுகேட்டாலும் உடனே மதுபானம் பாட்டிலானது கிடைக்கும்.
இதற்கென கூடுதல் பணம் தர வேண்டியது இருக்கும். எனினும் குடிமகன்கள் இதனைப் பற்றி கவலைப்படாமல் கேட்கும் பணத்தை கொடுத்து பாட்டில்களை வாங்கி போதையேற்றி வருகின்றனர். இதேபோல் ரவுண்டான அருகேயுள்ள பாரிலும், சாந்திகாலனி பகுதியிலுள்ள பாரிலும் 24 மணிநேரமும் கள்ளசந்தையில் மதுபானமானது விற்பனை செய்யப்படுகிறது. மதுபாட்டிலை வாங்கிச்செல்லும் மது பிரியர்கள் குடித்துவிட்டு அங்கேயே தகராறில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர்.
அத்துடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்கு எதிரேயுள்ள அன்னை சத்தியாநகர் பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரிலும் 24 மணிநேரம் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. ஆகவே நேரகாலம் இன்றி விற்கப்படும் மதுபானங்களால் இந்த பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அண்மை நாட்களாக அதிகரித்து வருகிறது. இரவு வேளையில் 10 மணிக்கு மேல் அரைகதவுகள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் பாரில் திருடர்களை போன்று குணிந்துச்சென்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
பகலில் வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரியும்வாறு விற்பனை நடைபெறுகிறது. பின் காலை 9 மணியளவில் அனைத்து பார்களில் 50-க்கும் மேற்பட்டோர் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது தொடர் கதையாகிவிட்டது. இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் இந்த பார்கள் ஆளும் திமுகவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பதால், அவர்களிடம் மாமூல் வாங்கிக் கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு மறுப்பதாகவும் கூறப்படுகிறது.