சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டுக்கான சொத்துவரி ரூபாய்.119 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய 2022-23ஆம் வருடத்துக்கான முதல் அரையாண்டு சொத்துவரியை கடந்த வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்ரல் 15) செலுத்த மாநகராட்சி அவகாசம் வழங்கியிருந்தது. அவ்வாறு வெள்ளிக்கிழமைக்குள் வரி செலுத்துபவர்களுக்கு சொத்துவரியில் 5 % விலக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களிலுள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் (அல்லது) டெபிட் காா்டு போன்றவற்றின் மூலமாகவும் மாநகராட்சி வரி வசூலிப்பாளா்கள், உரிம ஆய்வாளா்கள் வாயிலாகவும் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையிலும் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி புதிய சொத்துவரி குறித்து மன்றத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைபடுத்தப்படும். ஆகவே 2022-23-ஆம் வருடம் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை முன்பே மாநகராட்சிக்குச் செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. சொத்துவரி செலுத்துவதற்கான காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் நிறைவடைந்தது. சென்னையில் மொத்தமாக 12 லட்சம் சொத்துவரிதாரா்களில் 1.96 லட்சம் நபர்கள் ரூ. 119 கோடி சொத்துவரியை செலுத்தி உள்ளனா். அவ்வாறு வரி செலுத்தியவா்களுக்கு ரூபாய் 2.58 கோடி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.