சென்னையில், தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 62 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெரும் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் என தற்போது கொரோனா பிடியில் சிக்கியுள்ளது வேதனை அளிக்கிறது. அதேபோல, சென்னை திரு.வி.க, நகர் மண்டலத்தின் புளியந்தோப்பு பகுதியில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சிவராஜபுரம், பார்த்தசாரதி தெரு உள்ளிட்ட நெருக்கமான குடியிருப்பு பகுதிகளிலும் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளிலும் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தற்போது கொரோனா பரவும் மையமாக மாறியுள்ள கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நேற்று வரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு சேமத்தம்மன் கோயில் தெருவில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, சென்னையில் மாநகர காவல் அதிகாரியின் ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நரியங்காடு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவல் துறையை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.