தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பழ வியாபாரம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழை மண்டி அருகே வசித்து வந்துள்ளார். மேலும் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினாள் கொரோனா பரவி விடும் என்ற பயத்தினால் அங்கேயே இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் கடையில் வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் தூங்கியுள்ளார்.
மீண்டும் காலையில் வேலைக்கு செல்ல எழும்பிய ரமேஷ் அருகில் தூங்கி கொண்டிருந்த 3 மாத குழந்தையை பார்த்தபோது காணவில்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து, பக்கத்தில் தேடிப்பார்த்ததில் குழந்தையை காணவில்லை. எனவே இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் குழந்தையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். எனவே ரமேஷ் தனக்கு தெரிந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் உதவுமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த சமூக ஆர்வலர் குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதை வழக்கறிஞர்கள் மற்றும் நெட்டிசன்கள் உட்பட பலர் பகிர்ந்துள்ளனர். மேலும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இது சம்பந்தமான சமூகவலைதள கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் அமைத்து குழந்தையை தேடுமாறு அண்ணாநகர் துணை ஆணையர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்தேகப்படும்படியாக திருநங்கை ஒருவர் இரு நபர்களுடன் அப்பகுதியில் இரவில் சுற்றி திரிந்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சிசிடிவி காட்சிகள் மற்றும் திருநங்கையை துப்பாக வைத்து குழந்தையை தேடும் பணியில் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளருக்கு, அண்ணாநகர் துணை ஆணையர் ஜவஹர் விளக்கம் அளிக்குமாறு மெமோ அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.