ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் விதமாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக 74.2 கிலோமீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆங்காங்கே மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து போடும் விதமாக தனித்தனியே குப்பை தொட்டிகள் வைக்க வசதிகள் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிக்காக 300 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு ஆய்வாளர், மேற்பார்வையாளர் துணை செயற்பொறியாளர் போன்றோர் அடங்கிய குழு உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காமராஜர் சாலை, பூந்தமல்லி ஹைரோடு, பிரகாஷ் ஹோட்டல் டு கோயம்பேடு, கதிட்ரல் ரோடு, தியாகராஜா ரோடு, எல்லியட்ஸ் பீச் ரோடு, ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலை போன்ற 18 சாலைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இது குறித்து திடக்கழிவு மேலாண்மை துறையின் முதன்மை செயலாளர் என்.மகேஷ் கூறியதாவது, “மொபைல் சேவை என்ற வகையில் ஊழியர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து சாலைகளில் குப்பை கொட்டினால் எச்சரிக்கை விடுப்பார். அதேபோல் குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் சாலைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் குப்பை தொட்டிகளில் உரிய நேரத்தில் குப்பைகள் அகற்றப்படுவதையும் கவனித்துக் கொள்கின்றனர். இதனை தொடர்ந்து படிப்படியாக பல்வேறு சாலைகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மேலும் ஆங்காங்கே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகளும் வைக்கப்பட உள்ளது. இதில் விதி மீறல்களில் ஈடுபட்டால் கடும் அபராதம் விதிக்கவும் தயங்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் இது மாநகராட்சி நிர்வாகம் மட்டுமல்லாமல் மக்களின் இயக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் ஒரு புணர்வுடன் செயல்படுவதன் மூலமாக வேற லெவலுக்கு மாற்றிவிட முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.