சென்னையில் தொடர் கனமழை காரணமாக செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சோலிங்கநல்லூர் 15வது மண்டலம் செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது .சாலையில் சுமாராக இரண்டு அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்த பகுதியை ஐஏஎஸ் அதிகாரியான வீரராகவராவ் பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து வெள்ள நீர் சூழ்ந்த பகுதியை பார்வையிட்ட திமுக எம்எல்ஏ எந்திரம் மூலம் நீரை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஏற்கனவே தொடர் கனமழை காரணமாக மாமல்லபுரம் சாலையில் இருந்து செம்மஞ்சேரி வரை செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியுற்று வந்த நிலையில் செம்மஞ்சேரி எழில் நகர், ஜவஹர் நகர் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் சூழ்ந்துள்ள வெள்ள நீர் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.