சென்னையில் பொதுவாக மக்கள் தொகை அதிகம் என்பதால் எப்போதும் பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.நிலையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் ஒரு வாரத்திற்கு டிடிகே சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பு, கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு,சிவி ராமன் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.ஏ.புரம் இரண்டாவது பிரதான சாலை வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது .எனவே ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் நேராக சிபி ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலையை அடையலாம். அதேசமயம் இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை வழியாக செல்லலாம் என சென்னை மாநகர போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.