ஏற்காட்டில் பெய்த மழையின் காரணமாக மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தன. ஏற்காடு ரவுண்டானா பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.
இதேபோன்று வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு ஒன்று சேதம் அடைந்தது. மேலும் ஏற்காடு நாகலூர் சாலையில் இரண்டு மரங்களும், ஒண்டிக்கடை பகுதியில் இரண்டு மரங்களும், பக்கோடா பாயிண்ட் செல்லும் சாலையில் இரண்டு மரங்களும், கொம்மக்காடு, பட்டிப்பாடி கிராமத்தில் ஒரு இடத்திலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதில் சில மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்காடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்ததால் சீரமைக்கும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பணி நேற்றும் நீடித்தது. இதையடுத்து சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு நேற்று இரவு 7 மணிக்கு ஏற்காட்டில் மின்விநியோகம் சீரானது. மின்வினியோகம் வந்த பிறகு பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நேற்று முன்தினம் இரவு மட்டும் ஏற்காட்டில் 45.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.