அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை வேந்தர் சூரப்பா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு ஏற்றவாறு தமிழக அரசு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையில்லை என்று பதிலளித்தது.
இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதுமட்டுமன்றி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.