சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வரிஏய்ப்பு புகாரின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சொந்தமான கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில், 60-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், பாடி சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, போரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வரிஏய்ப்பு, கணக்கில் வராத முதலீடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கிளை நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக போரூர் குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதன் காரணமாக கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அனைத்து கடைகளின் நிலை வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது.