தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சோளம்பட்டு என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் சுமார் 130 க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு நெடுமானுர், காட்டுக்கொட்டாய், மணக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்து சிரமமான பாதைகள் மற்றும் காட்டுவழி கடந்து பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் மாணவர்கள் இப்படி சிரமப் படுவதை பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தலைமையாசிரியர் கந்தசாமி, சக ஆசிரியர்களிடம் இது பற்றி ஆலோசித்து உள்ளார். இதன்பிறகு ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சொந்த செலவில் காலை மாலை என இருவேளைகளிலும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்வதற்கு ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு. அதனால் மாணவர்களும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவார்கள்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் வேல்முருகன் என்பவரிடம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறோம், இரு வேளையும் மாணவ மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு வந்து செல்வதற்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் மாணவர்கள் எதிர்காலத்தில் தனக்கும் பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 5 ஆயிரம் ரூபாய் வேண்டாம் மாதம் 3,000 ரூபாய் மட்டும் போதும் எனக் கூறி பள்ளி மாணவர்களை தினமும் அழைத்துச் சென்று வருகிறார். ஆசிரியர்களின் இந்த கூட்டு முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.