தமிழக சுற்றுலாத்துறை சென்னை தீவுத்திடலில் 2023 -ஆம் ஆண்டுக்கான 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த பன் வேர்ல்டு ரிசர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளது. அதில் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் டெண்டர் திறக்கப்பட்டபோது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை இறுதி செய்துள்ளது. இதனால் டென்டருக்கு தடை விதிக்கவும், தங்கள் படிவத்தை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் வழக்கு நீதிபதி சி.வி சிவகார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது கடந்த 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற பொருட்காட்சியின் போது அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித்தொகை 3 லட்சத்து 6 ஆயிரத்து 903 ரூபாயை செலுத்தாத காரணத்தினால் பங்கேற்க அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு பாக்கி தொகை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டென்டரில் கலந்து கொள்ள முடியாது என டெண்டர் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில் இரு வழக்குகளையும் தலா 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.