சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை புல்வெளி போன்ற பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள்.
இதனையடுத்து கோடை சீசன் காலங்களில் மட்டும் பஞ்சாப், கொல்கத்தா, காஷ்மீர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 60 வகைகளில் பல்வேறு வகையான 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்படுகிறது. இந்த கோடை சீசன் காலங்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் மாற்றுத் திறனாளிகள், குழந்தையுடன் வரும் கைப் பெண்கள் சற்று கரடு முரடான பகுதிகளுக்கு சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக பூங்கா நிர்வாகம் ஒரு பேட்டரி வாகனத்தை வாங்கியுள்ளனர். இந்த காரை பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்தவுடன் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர்.