ஆற்றில் மூழ்கி சுற்றுலாவுக்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மைதீன் ரெசவுமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் தென்புறம் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் மைதீன் குடும்பத்தினர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ரெசவுமா, உறவினரான நிஷா, அவருடைய மகன் மஸ்தான் ஆகியோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரெசவுமாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிஷா மற்றும் மாஸ்தான் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.