அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் புகை காற்று மண்டலத்தை பாதிக்காமல் இருக்க தொழிற்சாலைகள் விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு தொழிற்சாலைகளின் வளர்ச்சியானது அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த தொழிற்சாலைகளினால் நாட்டின் வளங்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஆகவே இதனால் காற்றிலும், சுற்றுப்புறத்திலும், நீரிலும் மாசு கலக்காத வகையில் அமைய வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை மீறி கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு வருவதால் அப்பகுதியில் உள்ள காற்று, நீர் மற்றும் நிலம் மாசு படுகிறது.
மேலும் அந்தந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையானது பலகட்ட செய்முறைகளுக்குப் பிறகு உயரமான புகைபோக்கி மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் இதனை எந்த தொழிற்சாலையும் பின்பற்றவில்லை. இதற்கு மாறாக கூரை வழியாக கரும்புகையை வெளியேற்றி காற்றினை மாசு படுத்தி வருகின்றது. எனவே தமிழக அரசானது, பொதுமக்கள் சுவாசிக்கும் காற்று மாசு கலந்து பாதிக்காமல் இருப்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசு ஏற்படுகின்றனவா என்பதையும், புகையால் காற்று மாசுபடாமல் இருக்க நியமிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனவா? என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆகவே தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு அப்பகுதி உள்ள தொழிற்சாலைகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றப் படுகின்றனரா? என்பதை உற்று நோக்கி கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது உரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.